ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மீனாட்சிசுந்தரனார் சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாநகராட்சியின் பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது.
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் கே.சிவகுமார் வேட்பு மனுக்களை பெறுவதற்காக அமர்ந்திருந்தனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த இடைத்தேர்தலில் சேலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் மன்னனும் போட்டியிட முதல் நாளே வேட்பு மனுதாக்கல் செய்ய வந்திருந்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் பத்மராஜன் (வயது 65) வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
டயர் பஞ்சர் ஒட்டும் நிறுவனம் நடத்தி வரும் பத்மராஜன் தனது 233 வது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். மேலும், இதுவரை அவர் தேர்தல் செலவாக 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் பத்மராஜன் தெரிவித்துள்ளார்.