சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் செந்தில்முருகன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றி வேட்பாளராக, டி.செந்தில்முருகனை கட்சியின் வெற்றி வேட்பாளராக தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகிறார்.
வேட்பாளர் செந்தில்முருகன் கட்சியினுடைய தீவிர விசுவாசி. தீவிர உறுப்பினர். கட்சியின் மீதும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீதும் தீவிர பற்றுக்கொண்டவர். இந்தத் தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” என்று அறிவித்தார்.
முன்னதாக, இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிவித்திருந்தார்.