ஈரோடு கிழக்கு – டெல்லி கிளம்பிய அண்ணாமலை: தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிமுக கூட்டணியில் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவு எட்டப்படாமல் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால்
ஓபிஎஸ்
, இபிஎஸ் இரு தரப்பிலும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

தமாகாவிடம் தொகுதியை கேட்டுப் பெற்று அதிமுக போட்டியிடுவதாக அறிவித்தார்
எடப்பாடி பழனிசாமி
. எனவே தனது பங்குக்கு தானும் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் அல்லது வேறு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு ஆளானார் ஓ.பன்னீர் செல்வம். நாங்கள் போட்டியிடுவோம் ஒருவேளை பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறினார் ஓபிஎஸ்.

இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாஜக என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வேட்பாளர் குறித்து இன்று பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர் பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்று கூறினார். ஆனால் தங்கள் முடிவை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாஜக என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை கட்சி மேலிடத்திடம் ஆலோசிக்க அண்ணாமலை இன்று இரவு எட்டு மணிக்கு டெல்லி செல்கிறார். அங்கு பாஜகவின் முக்கிய புள்ளிகளை சந்தித்துப் பேசுகிறார்.

அண்ணாமலையை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ்ஸோ டெல்லியை முழுதாக நம்பியுள்ளார். ஒருவேளை பாஜக எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக சொல்லிவிட்டால் ஓபிஎஸ் தனித்துவிடப்படுவார். அல்லது பாஜக போட்டியின்றியும், ஆதரவு தெரிவிக்காமலும் ஒதுங்கிக்கொண்டால் அதுவும் ஓபிஎஸ்ஸுக்கு தலைவலியாக அமையும்.

தனித்து களமிறங்கும் சூழல் ஏற்பட்டால் டெபாசிட் பறிபோகும் சூழல் ஏற்படலாம் என்ற பயம் ஓபிஎஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த சூழலில் இன்று மாலை ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

ஒரு பக்கம் அண்ணாமலை டெல்லி சென்று உத்தரவு வாங்க கிளம்ப, ஒரு பக்கம் ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை மீண்டும் தெரியப்படுத்த ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்திக்க, எடப்பாடி பழனிசாமி தரப்போ ஈரோடு கிழக்கு தொகுதியை மாஜி அமைச்சர்களோடு வலம் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.