எடப்பாடி சொல்லும் குட் நியூஸ் என்ன? ஈரோடு கிழக்கு – திடீர் பரபரப்பு!

அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம் என்று கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, கமலாலயம் வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

யார் யாரை எதிர்பார்க்கிறார்கள்?அதிமுகவின் இரு தரப்பும் பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாக வந்து சந்தித்த போதும் பாஜகவும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க தயாராக இல்லை. ஓபிஎஸ் பாஜகவின் பதிலுக்காக காத்திருக்கிறார். பாஜக எடப்பாடி பழனிசாமிக்காக காத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் முடுவெடுக்க உத்தரவிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.
நல்ல நேரம் பார்க்கும் எடப்பாடிஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. பிப்ரவரி 7ஆம் தேதி வரை அவகாசம் இருக்கும் நிலையில் 3ஆம் தேதிக்குப் பின்னர் வேட்பாளரை அறிவித்து நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு வருகிறது.
பாஜக காத்திருக்கவில்லையா?இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்குப் பின்னர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்த போது, “இடைத்தேர்தல் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிட பாஜகவிலிருந்தே பலரும் வாய்ப்பு கேட்கிறார்கள். அனைத்தும் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்தே முடிவெடுக்க முடியும். ஓபிஎஸ், இபிஎஸ் என பலரும் கலந்து ஆலோசித்துள்ளனர். எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அதுபற்றி கவலை இல்லை. இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாஜகவின் நிலைப்பாடு இரு நாள்களில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
செங்கோட்டையன் சொல்வது என்ன?இந்நிலையில் இன்று மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த செங்கோட்டையன், “ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் திருப்பு முனையை ஏற்படுத்துவதாக அமையும். வேட்பாளா் அறிவிப்பில் குழப்பமே கிடையாது. தேர்தல் பணிமனைகள் புதன்கிழமை (இன்று) காலை திறக்கப்படும். அதற்குப் பிறகு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.” என்று கூறினார்.
எடப்பாடி கூறும் நல்ல செய்தி!​​
அதிமுக காத்திருக்கட்டும் எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை என்று பாஜக நாராயணன் கூறினாலும், உண்மையில் எடப்பாடி பழனிசாமியின் நகர்வுகளை பார்த்த பிறகே முடிவு எடுப்பார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்நிலையில் இன்று மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியுள்ள நிலையில் இடைக்கால தேர்தல் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.