ஈரோடு: ”என்னை எளிதில் அணுக முடியும். என் வீட்டுக்கு வாட்ச்மேன் கிடையாது” என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேசியது கலகலப்பை ஏற்பத்தியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, ஈரோடு – பெருந்துறை சாலையில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், தேர்தல் பணிக்குழுவில் அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு நடந்து கொண்டு இருந்தபோது, அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தன்னை வேட்பாளராக தேர்வு செய்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த கே.எஸ். தென்னரசு கூறியது: ”அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கம், அரசு மருத்துவமனை மேம்பாலம், அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்வு, கனி ஜவுளிச் சந்தைக்கு புதிய வணிக வளாகம் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
என்னை எளிதில் யாரும் அணுக முடியும். எனது வீட்டில் காவலுக்காக வாட்ச்மேனோ, நாயோ இல்லை. 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ள முடியும். இந்தத் தொகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, உரிமையாய் பழகி வருகிறேன். இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.