பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனித்தனியாக ரசிகர்கள் ஆர்மி அமைத்துள்ளனர். தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. சமீபத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது, இந்த சீஸனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது சீஸனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டதில் பெரும்பாலான ரசிகர்களுக்கு உடன்பாடு இல்லை. ரசிகர்கள் பலரும் விக்ரமன் அல்லது ஷிவின் தான் டைட்டில் வின்னராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த நாள் முதல் ஷிவினுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிதும் இருந்து வந்தது.
எந்தவொரு விஷயத்தையும் அவரை கையாளும் விதமாக இருக்கட்டும், போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கட்டும், அனைத்திலும் ஷிவின் சிறப்பாக செயல்பட்டார். ஷிவின் டைட்டில் வின்னர் ஆகவில்லையே என்கிற கவலை இன்னும் அவரது ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இருப்பினும் இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் ஷிவினுக்கு மட்டும் மூன்றாவது பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆதரவை கொடுத்தது. ஷிவின் ஏற்கனவே ஒரு தொழிலதிபராக தன்னை நிலைநாட்டிக்கொண்டு ஆளுமை செலுத்தி வருகிறார். இந்நிலையில் திரைத்துறையிலும் சாதிக்கும் முயற்சியில் ஷிவின் ஈடுபட்டு இருக்கிறார். ஷிவின் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடிக்கப்போவதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஷிவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதனுடன் தனக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். விஜய் டிவியில் நீண்ட நாட்களாக பாரதி கண்ணம்மா சீரியல் ஓடிக்கொண்டு இருக்கிறது, தற்போது இந்த சீரியல் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில் ஷிவின் இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ஜனனி லோகேஷ் கனகராஜ்-விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 67’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.