ஊட்டி: ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கால்வாயை காணோம் கண்டுபிடித்து கொடுங்கள் என திமுக கவுன்சிலர் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷ்னர் காந்திராஜ் மற்றும் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடந்த விவாதம் வருமாறு:
ஜார்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சியில் கடந்த ஓராண்டில் எந்த ஒரு நிதியும் வரவில்லை. இதற்காக நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொண்டதாக தெரியவில்லை. பொது நிதியில் இருந்து பணிகளை செய்ய நிதி ஒதுக்கினால், விரைவாக அதற்குண்டான தொகை கிடைப்பதில்லை எனக்கூறி எந்த ஒரு கான்ட்ராக்டரும் பணிகள் மேற்கொள்வதில்லை. சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை அணுகி, நிதி கேளுங்கள். கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், சில இடங்களில் கவுன்சிலர்களின் உறவினர்கள் சென்று பலரையும் மிரட்டுவதாக புகார்கள் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி நகரில் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கமர்சியல் சாலையில் ஒரு கால்வாய் இருந்தது. சுமார் 10 அடி அகலம் இருந்த அந்த கால்வாயை கடந்த சில ஆண்டுகளாக காணவில்லை. அதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, அந்த கால்வாயை கண்டு பிடித்து, மீண்டும் கால்வாயை அமைக்க வேண்டும். இதனால், நகர் மன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. அதேசமயம் கால்வாய் காணவில்லை என புகார் கூறியது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்கு பல நிறுவனங்கள் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. ஆனால், ஊட்டி மார்க்கெட்டிற்கு நாள்தோறும் அதிகாரிகள் சென்று வாடகை பாக்கியை செலுத்தக்கோரி தொல்லை கொடுக்கின்றனர். தகாத வார்த்தைகளை பேசும் அதிகாரிகள், கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளையும் மேற்கொள்கின்றனர். ஊட்டி நகராட்சி வியாபாரிகளுக்கு தொல்லை தர வேண்டாம். அதேபோல், வாடகை பாக்கி தொகை செலுத்த தற்போது அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். ஊட்டியில் பல இடங்களில் விதி முறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தம்பி இஸ்மாயில் (திமுக): ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், குறிப்பாக காந்தல் பகுதியில் தெரு நாய் மற்றும் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கழிப்பிடங்களை சீரமைக்க வேண்டும். ரவி (திமுக): எனது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ஒரு ரூபாய்க்கு கூட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவில்லை. கவுன்சிலராக இருந்து எந்த ஒரு பயனும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக ஊட்டி நகராட்சியில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இதனால், எந்த ஒரு கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தாலும் அதனை கண்டு கொள்வதில்லை. எனவே, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நகராட்சி அதிகாரிகளை பணிமாற்றம் செய்ய வேண்டும். அபுதாகீர் (திமுக) படகு இல்லம் செல்லும் சாலையில் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனியார் ஓட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேறுகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கீதா (திமுக) : ஊட்டி நகராட்சியில் ஏதேனும் ஒரு பணிகளை மேற்கொள்ள பொருட்களை கேட்டால் இல்லை என்ற பதிலே வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். கமிஷனர் வீட்டை சீரமைக்க ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்யும் நகராட்சி, அனைத்து வார்டுகளிலும், அவசர பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நாகமணி (திமுக): குளிச்சோலை பகுதியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எந்தெந்த வார்டு என்பதை பிரித்து கொடுக்க வேண்டும்.
செல்வராஜ் (திமுக): எனது வார்டிற்குட்பட்ட நொண்டிமேடு பகுதியில் சிறுத்தை போன்ற வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது.
எனவே, இப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும். சத்துணவு பகுதியில் புதிதாக நிழற்குடை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஜெயலட்சுமி (அதிமுக): கோழிப்பண்ணை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். அதேபோல், கோழிப்பண்ணை பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சீரமைத்து கொடுக்க வேண்டும்.
சகுந்தாலா (அதிமுக): பெரியார் நகர் செல்லும் நடைபாதையை விரிவாக்கம் செய்து வாகனங்கள் செல்ல ஏற்றவாறு அமைத்து தர வேண்டும். கோரிசோலா சாலையை சீரமைக்க வேண்டும்.
தலையாட்டு மந்து பள்ளிக்கு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும். ஆர்டிஓ அலுவலகம் முதல் தலையாட்டு மந்து வரையில் உள்ள சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும்.
அன்புசெல்வன் (அதிமுக): மிஷனரி ஹில் செல்லும் சாலையில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓல்டு ஊட்டியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ரஜினி (காங்.): சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அங்கு நிற்கும் பயணிகளுக்கு விபத்து அபாயம் தொடர்கிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
துணைத் தலைவர், ரவிக்குமார்(திமுக): ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கான்ட்ராக்டர்கள் திட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். பொது நிதியில் இருந்து ஒதுக்கப்படும் பணிகளை மேற்கொள்வதில்லை.
ஊட்டி நகராட்சியில் மாதிரி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்களை காலி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பந்தய குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தக்கூடாது என தற்போது அனைத்து பகுதிகளிலும் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பல குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும். கட்டிடங்கள் கட்ட அனுமதி கேட்டு பல ஆண்டுகளாக மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. உடனடியாக அனுமதி கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்களுக்கு சீல் வைப்பது மற்றும் நகராட்சி குடியிருப்புகளில் உள்ள 300 குடும்பங்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது வருத்தம் அளிப்பது மட்டுமின்றி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது போல உள்ளது. எனவே, இதனை அதிகாரிகள் கைவிட வேண்டும். என்றார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.