தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் நிலவரப்படி மட்டக்களப்புக்கு கிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் வலுப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை கிழக்கு கடற்கரையை நெருங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
காற்றின் வேகம் அதிகரிப்பு
இது தவிர, குருநாகல், மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.