விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரபட்டினத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன், முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது 3வது மகன் சரவணக்குமார் (34). சிவில் இன்ஜினியர். கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் விநியோகிக்கும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்குள்ள மேல்நிலை தொட்டியை பார்த்தபோது அதில் சரவணகுமார் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து சரவணக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, மேல்நிலை குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் சம்பவம் நடந்த கிராமத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் சுத்தமான குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இன்ஜினியர் சரவணகுமார் குடும்பத்திற்கு நிவாரண நிதியையும் அமைச்சர் வழங்கினார். விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்தி கணேசன் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.