திண்டுக்கல்: கொடைக்கானல் நகராட்சி பகுதியில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகிலுள்ள மையத்தில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பிப். 1 (நேற்று) முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, (அடைப்பிற்குள் பழைய கட்டணம்) சுற்றுலா பஸ் ரூ.250 (200), பஸ் ரூ.150 (100), லாரி (கனரக வாகனங்கள்) ரூ.100 (80), வேன், மினி லாரி, டிராக்டர் ரூ.80 (70), சுற்றுலா சிற்றுந்து, வாடகை கார்கள் ரூ.60 (50), சொந்த பயன்பாட்டு கார், ஜீப் ரூ.60 (50) என உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை. மேலும் கொடைக்கானல் தாலுகாவிற்குட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் உரிய ஆவணங்களை நகராட்சியில் சமர்ப்பித்து இலவச அனுமதி பெற்று கொள்ளலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு தெரிவித்தார்.