நாகர்கோவில்: சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(37). சின்னமுட்டம் கிராமத்தை சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கபிலன், நெல்லை மாவட்டம் பெருமணலை சேர்ந்த துரைராஜ் ஆகிய 5 மீனவர்கள் சவுதி அரேபியா நாட்டின் கத்திப் என்ற பகுதியிலிருந்து கடந்த ஜனவரி 21ம் தேதி அரேபிய முதலாளிக்கு சொந்தமான ‘ரஸ்மா அல் அவள்’ என்ற விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த 22ம் தேதி ஈரான் கடல் கொள்ளையர்கள் வந்து தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு பயந்து மீனவர்கள் படகுகளுக்குள் ஒளிந்து கொண்டனர். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது ராஜேஷ்குமார் இடது கண், காது, தொண்டை பகுதியில் குண்டடிபட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுன்டர், வயர்லெஸ் கருவிகள், மீன்கள், செல்போன்கள் அனைத்தையும் ஈரான் கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். தகவலறிந்து சவுதி அரேபிய கடலோர காவல் படையினர் வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷ்குமாரை மீட்டு மௌசட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தகவலறிந்ததும் சவுதி அரேபியா நாட்டின் தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களில் மீன்பிடி தொழில் செய்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த இந்திய மீனவர்கள் அனைவரும், கடந்த 23ம் தேதி முதல் 9 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்தநிலையில், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் குமரி மாவட்ட கடலோர ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெய சுந்தரம், பங்குத்தந்தைகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் குமரி மாவட்ட கலெக்டர் வழியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நேற்று மனு அளித்தனர். அதில், ‘இந்திய அரசு உடனே சவுதி அரேபியா அரசை தொடர்பு கொண்டு அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டினாலும் தாக்குதனாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உரிய நிவாரணத்தை சவுதி அரேபியா அரசு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.