கடலூர்: சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயமானது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கியதாக வரலாறு கூறுகிறது.
இந்நிலையில் கோயில் வெளிப் பிரகாரத்தில் இருந்த திரு நீலகண்ட நாயனார் – ரத்தினாசளை தம்பதியர்கள் சிலை மாயமாகியுள்ளது. இது குறித்து கோயில் டிரஸ்டி பழனியப்பா செட்டியார் இன்று (01.02.23) அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் மற்றும் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கால் அடி உயரமுள்ள இந்த இரண்டு சிலைகளும் மிகவும் பழமையான கற்சிலைகள் என்று கூறப்படுகிறது. சிலை காணாமல் போனது அறிந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.