ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் அங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா-வின் தந்தையும் காங்கிரஸ் தலைவருமான ஈவிகே இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அதன்பின் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, இன்று காலை எடப்பாடி பழனிசாமி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார் தென்னரசு. தொடர்ந்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அவர். இதற்கிடையே அவர் நன்கு அறிமுகமான வேட்பாளர் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இருப்பினும் பாஜக தரப்பில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படுவில்லை.
இப்படியான சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனது தரப்பு வேட்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி செந்தில்முருகன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன். பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம்” என்றுள்ளார்.
இந்த சந்திப்பில் ஓபிஎஸ் ஃபோட்டோ காண்பித்து தன் தரப்பு வேட்பாளரை அறிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM