ஜெர்மனி நாட்டின், மைன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு 23 வயதான இளம்பெண் ஒருவர் காணாமல்போனதாக, அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதையடுத்து, போலீஸாரால் தேடிவரப்பட்ட அந்தப் பெண், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காரில் சடலமாக மீட்கப்பட்டார். மர்ம மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார், தங்கள் மகள் காணாமல்போனதாகப் புகார் அளித்தவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு, உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் முடிவில், போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்தச் சடலம் காணாமல்போனதாகக் கருதப்படும் இளம்பெண்ணின் சடலம் இல்லையென்பது தெரியவந்தது.
இந்தத் தகவலால் போலீஸார் திகைப்பில் ஆழ்ந்திருக்க, மாயமான இளம்பெண்ணின் பெற்றோர் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். காணாமல்போன அந்தப் பெண்ணின் முகத்தோற்றமும், இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் முகத்தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தது பல சந்தேகங்களை போலீஸாருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
அதையடுத்து, பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், காணாமல்போனதாகக் கருதப்படும் இளம்பெண்ணை இங்கோல்ஸ்டட் என்ற இடத்தில் மீட்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அந்தப் பெண்ணைக் கைதும்செய்தனர்.
இந்த வழக்கின் அதிர்ச்சிப் பின்னணியை ஊடகங்களுக்கு விவரித்த அந்தப் பகுதியின் காவல்துறை செய்தித் தொடர்பாளரான ஆன்ட்ரியாஸ் ஆய்ச்சீல், “குற்றம்சாட்டப்பட்ட அந்த 23 வயது இளம்பெண் குடும்பச் சூழல் காரணமாக பிரச்னையில் இருந்திருக்கிறார். அதனால், புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று விரும்பிய அவர், தான் இறந்துவிட்டது போல நாடகமாடி, அவர் பெற்றோரை நம்பவைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
இதற்காகத் தன்னை போலவே, முக ஒற்றுமைகொண்ட மற்றொரு பெண்ணைக் கொலைசெய்ய, சமூக வலைதளங்களில் தீவிரமாகத் தேடி வந்திருக்கிறார். இது தொடர்பாகப் பல இளம்பெண்களிடம் சமூக வளைதளங்களில் பேசியிருக்கிறார். இந்த நிலையில்தான், இன்ஸ்டாகிராமில் தன்னைப் போலவே இருக்கும் இளம்பெண் ஒருவரை அடையாளம் கண்டு, அவரை தன்னுடைய திட்டத்துக்கு இரையாக்க முடிவுசெய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் பேசி அவரை தன்னுடைய வலையில் சிக்கவைத்தவர், தன் 23 வயது ஆண் நண்பருடன் ஹீல்ப்ரோன் என்னும் இடத்துக்குச் சென்றிருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து அந்தப் பெண்ணை, தான் ஏற்கெனவே முடிவுசெய்து வைத்திருந்தபடி திட்டமிட்ட இடத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். பின்னர், தன்னுடைய காரில் அந்தச் சடலத்தைப் போட்டுவிட்டு, தலைமறைவாக, புது வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், இளம்பெண்ணை நாங்கள் கைதுசெய்திருக்கிறோம். ஜெர்மனிய தனியுரிமைச் சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெயர், தகவல்களை நாங்கள் பகிர மாட்டோம்” என்றார்.