திருமலை: திருமலையில் மீண்டும் பாதுகாப்பு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. நிபந்தனைகளுக்கு மாறாக ஒரு கார், திருமாட வீதிகளில் நேற்று சுற்றி வந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் கொண்டுள்ள திருமலையில் உள்ள மாட வீதிகள் மிகவும் பவித்ரமாக, சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுகிறது. இந்த திருமாட வீதிகளில் பக்தர்கள் யாரும் செருப்புடன் நடக்க அனுமதி இல்லை. விஐபிக்கள் கூட திருமாட வீதியில் தேர் நிறுத்தம் உள்ள இடத்தில் தங்கள் காரை நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கோயிலுக்குள் செல்வது வழக்கம். ஆனால், வயதான பக்தர்கள், மாற்றுத் திறனாளி பக்தர்களுக்காக மட்டும் தேவஸ்தானத்தின் பேட்டரி கார்கள் மட்டும் கோயில் அருகிலிருந்து ராம்பக்கீச்சா வழியாக வெளியில் உள்ள சாலை வரை இயக்கப்படுகிறது.
ஆனால், நேற்று திடீரென ’சிஎம்ஓ’ என ஸ்டிக்கர் ஒட்டிய கார் (முதல்வர் அலுவலக கார்) வாகன மண்டபத்தின் அருகிலிருந்து மாட வீதிக்கு சென்று, அதன் பின்னர், குளத்தின் அருகே திரும்பி கொண்டு மீண்டும் வாகன மண்டபம் வழியாக வெளியில் சென்றது. இந்த வீடியோ காட்சி உடனடியாக சமூக வலைதளங்களில் வெளிவரத் தொடங்கியது. சில தெலுங்கு ஊடகங்களிலும் இது வெளியானது.
சமீபத்தில், ஹைதராபாத்தின் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவ ர்கள், திருமலையில் பேடி ஆஞ்ச நேயர் கோயிலில் இருந்து சுவாமி யின் திருக்கோயில் வரை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்தனர். இதனால் திருமலை ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக பலர் கண்டனம் தெரிவித்தனர். இது நடந்து 20 நாட்களுக்குள் மீண்டும் கார் ஒன்று அனுமதியின்றி மாடவீதிக்கு வந்து சென்றது விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.
ஆனால், வழக்கம்போல் இதனையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. அந்த கார் மாட வீதியில் செல்லவில்லை எனவும், வாகன மண்டபம் வரை மட்டுமே வந்ததாக தெரிவித்துள்ளது.