தைவானில் பறவையால் காயமடைந்த மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 74 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிளியால் காயமடைந்த மருத்துவர்
தைவானில் செல்லப்பிராணியான மக்கா கிளி(macaw) ஒன்றினால் மைதானத்தில் ஜாக்கிங் சென்று கொண்டு இருந்த மருத்துவர் லின் கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான லின் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், இந்த காயத்தால் அவரால் தன்னுடைய தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கா கிளியின் உரிமையாளரான ஹுவாங்கிற்கு எதிராக டாக்டர் லின் தனது நிதி இழப்புகளுக்கு நஷ்ட ஈடு கோரி சிவில் உரிமைகோரலை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் காயங்களுக்குப் பிறகு தான் மருத்துவமனையில் ஒரு வாரம் கழித்ததாகவும், மூன்று மாதங்கள் சிறப்பு கவனிப்புடன் குணமடைந்ததால் ஆறு மாதங்கள் வேலை செய்ய முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உரிமையாளருக்கு சிறை தண்டனை
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிமையாளர் ஹூவாங்கின் அலட்சியமே டாக்டர் லின் வீழ்ச்சிக்கு காரணம் என முடிவு செய்தது.
மக்கா கிளியின் அளவு 40 செ.மீ உயரம் 60 செ.மீ இறக்கையுடன் இவ்வளவு பெரிய விலங்கின் உரிமையாளர் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து இருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையுடன் 74 லட்சம் ரூபாய் ($91,350) அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உரிமையாளர் ஹூவாங் (Huang) நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கா பறவைகள் வன்முறையான பறவைகள் இல்லை என்றும், அபராத தொகை மிக அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.