நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரூபி (3), மரியா ஆரோனிக்கா (8 மாத குழந்தை) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மரியா ஆரோனிக்காவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆரோனிக்காவை பெற்றோர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆரோனிக்காவை மருத்தவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஆரோனிக்காவுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆரோனிக்காவை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தனி மருத்துவ குழுவினர் ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பிறந்து 8 மாதமேயான ஆரோனிக்கா சர்க்கரை நோயால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனிடையே, கடந்த 28-ம் தேதி நாகையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் எடுத்த ரத்த பரிசோதனையில் சர்க்கரையின் அளவு 251 ஆக இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைக்கு சர்க்கரையின் அளவு 520 ஆக உயர்ந்துள்ள நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து நாகை மருத்துவக் கல்லூரி முதல்வர் விஷ்வநாதனை கேட்டபோது குழந்தை உயிரிழந்துள்ள மருத்துவ காரணங்கள் அறிக்கை பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை மற்றவர்களுக்கு சொல்ல மாட்டோம் என்று தெரிவித்தார்.