கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், சோதனை முயற்சியாக, சிறிய அளவில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதற்கு குற்ற விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தண்டனை பயத்தால், சிலர் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை மறைப்பதையும், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது
புர்கினா ஃபாசோ (Burkina Faso) நாட்டில் ஆயுதங்கள் ஏந்திய போராட்டக்காரர்களுக்கும், ராணுவப் படையினருக்குமிடையே ஏற்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.
உலகின் மிகப்பெரிய சோலார் ஆலைகளுள் ஒன்றாக மாறப்போகிறது ஐக்கிய அரபு நாடுகளில் அமைந்திருக்கும் அல் தஃப்ரா செயல்திட்டம். 35 கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இந்த சோலார் ஆலை மூலமாக 1,60,000 வீடுகளுக்கு மின்சார சேவை வழங்க முடியும் எனத் தகவல்.
பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 குழந்தைகள் உட்பட 51 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இரானில் பிரபலமான ஆசாதி டவர் முன்னால் நடனமாடிய குற்றத்துக்காக இளம்பெண், அவர் காதலருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இரானில் பெண்கள் பொது இடங்களில் ஆணுடன் தனியாக நடனமாடத் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற பிரிட்டிஷ் தடகள வீரர் மோ ஃபரா (Mo Farah), லண்டன் ஒலிம்பிக்ஸ் தன் இறுதி ஆட்டமாக இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். 40 வயதாகும் ஃபரா 2012 லண்டன், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அமைப்பான EPA, சால்மன் மீன்கள் அதிகமிருக்கும் அலாஸ்காவின் பிரிஸ்டல் பே பகுதியில் தங்கம், செம்பு தொடர்பான சுரங்கப் பணிகளுக்கு அனுமதியை மறுத்திருக்கிறது.
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (Committee to Protect Journalists) தரவுகள் அடிப்படையில், உலகில் பத்திரிகையாளர்களின் உயிரிழப்பு 2022-ல் 50 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 67 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 35 கொலைகள் உக்ரைன், மெக்ஸிகோ, ஹைத்தி ஆகிய மூன்று நாடுகளில் நடந்தவை எனக் கூறப்படுகிறது.
உலகின் முழுமையான, மிகவும் பழைமையான மம்மி எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 4,300 ஆண்டுகள் பழைமையான இந்த மம்மி சக்காராவிலுள்ள ஒரு பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸில், ஓய்வுபெறும் வயதை 64-ஆக உயர்த்தும் முடிவைக் கண்டித்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.