ஒன்றிய பட்ஜெட்டை இதுவரை ஆறு தமிழர்கள் தாக்கல் செய்துள்ளனர். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது, முதல் பெண் நிதியமைச்சர் என பல பெருமைகள் தமிழ்நாட்டிற்கு உள்ளன.
நிர்மலா சீதாராமன்ஒன்றிய அரசின் பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 2019ஆம் ஆண்டு அருண் ஜேட்லி மறைவுக்குப் பின்னர் நிதியமைச்சர் பதவியேற்ற நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். சுதந்திர இந்தியாவில் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நிர்மலா. நிர்மலா சீதாராமனுக்கு முன்பாக தமிழர்கள் சிலர் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
ப.சிதம்பரம்தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து ஒருமுறையும், இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து மூன்று முறையும் என ப.சிதம்பரம் இதுவரை நான்கு முறை நிதியமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளார். 9 முறை ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து சென்ற நிதியமைச்சர்களில் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம் தான்.
ஆர். வெங்கட்ராமன்முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக 1980, 1981 ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார். தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட வெங்கட்ராமன் 1950லேயே பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தொழில்துறை அமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
சி. சுப்பிரமணியம்1975ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டி வரை ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் சி. சுப்பிரமணியம். பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய திட்டக் கமிசனின் துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
டி. டி. கிருஷ்ணமாச்சாரி1957, 1958, 1964, 1965 ஆகிய நான்கு ஆண்டுகள் ஒன்றிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் டி. டி. கிருஷ்ணமாச்சாரி. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சென்னை கிறிஸ்துவக் கல்லுரியில் பட்டம் பெற்றவர். அக்கல்லூரியின் பொருளியல் துறையில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆர். கே. சண்முகம் செட்டியார்சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகரும் இவரே.