சென்னை, ”மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கேட்டு பெற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்,” என, மத்திய அரசின் வருவாய் துறை முன்னாள் செயலர் சிவராமன் தெரிவித்தார்.
‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின், தமிழக கவுன்சில் சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த கலந்தாய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
அதில், சிவராமன் பேசியதாவது:
மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. வரும் நிதியாண்டில் மத்திய அரசு, நடைமுறை மூலதனமாக 10 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு பெருகும். குறிப்பாக, துறைமுகம், ரயில்வே துறைகளில் அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.
இது தவிர, மாநில அரசுகளும் மூலதன செலவினங்களுக்கு செலவு எனவே, மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து, வரும் நிதியாண்டில் 12 லட்சம் கோடி ரூபாயை மூலதன செவுகளுக்கு செலவு செய்யும்.
இதனால் அமைப்புசாரா ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அதிகம் வேலைவாய்ப்பு கிடைக்கும். மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
அவை, வாங்கிய கடன்களை ஒழுங்காக செலுத்துகின்றன. பட்ஜெட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன்கள் வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நாடு முழுதும் 50 சுற்றுலா தலங்களை மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் சுற்றுலா, பயணம், போக்குவரத்து ஆகிய துறைகளில்தான் அதிக வேலைவாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருப்பதுடன், மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தென் மாநிலங்களுக்குதான் அதிகம் வருகின்றனர்.
‘பந்திக்கு முந்தி செல்ல வேண்டும்’ என்பர். எனவே, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில், அவற்றை கேட்டு பெற, தமிழக அரசு விரைந்து முயற்சிக்க வேண்டும்.
தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் வறுமை கிடையாது என்று சொல்லலாம்.
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க, எளிய முறையில் தொழில் துவங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பிக்கி அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் அம்ரித் லால், பூபேஷ் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்