இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்திய ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றுகிற அறிக்கையாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவர்களுக்குத் துரோகமிழைக்கும் இந்த பட்ஜெட், நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் இந்த மக்கள்விரோத பட்ஜெட்டை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மோடி அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள். குடியரசுத் தலைவர் உரையிலும், பொருளாதார ஆய்வு அறிக்கையிலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிய பாஜக அரசு, இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அதே ஏமாற்று வேலையைத் தொடர்ந்துள்ளது.
நடுத்தர வர்க்க மக்களுக்கு வருமான வரி விதிப்பில் மிகப்பெரிய சலுகை அளித்து விட்டது போல் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் ஆரவாரமாக அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் ஈட்டுகிறவர்களே பயனடைவார்கள், மாத சம்பளம் வாங்கும் மற்ற நடுத்தர வர்க்கப் பிரிவினர் எவருக்கும் இந்த அறிவிப்பால் எந்தவொரு பயனும் கிடையாது.
பாஜக அரசு மக்களுக்கு அடிப்படைத் தேவையான கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையில் கல்விக்காக உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) 6 % ஒதுக்குவோம் என்று அறிவித்தது பாஜக அரசு. ஆனால் கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு 2.64% ஆக இருந்தது. அதை இந்த ஆண்டு 2.5% ஆகக் குறைத்து விட்டது.
அதுபோலவே சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஜிடிபியில் 2.2% ஆக இருந்தது. அது இப்போது 1.97% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களைச் சார்ந்த மக்கள் பயனடைவதற்கென உருவாக்கப்பட்ட தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மோடி அரசு வெகுவாகக் குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்துக்கென 73 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டோ அது 60 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு 5020.50 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2000 கோடி ரூபாய் இந்தாண்டு குறைக்கப்பட்டு வெறும் 3097.60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான தொகையில் 1000 கோடி ரூபாயைக் குறைத்து இருக்கிறார்கள்.
அதுபோல சிறுபான்மையினருக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 400 கோடி ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரிய கரம் என்ற திட்டத்திற்கு கடந்த ஆண்டு 1650 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் 1050 கோடி குறைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் வெறும் 600 கோடி ரூபாய் மட்டும் தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரி – உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் முதல் கூட்டம்
சிறுபான்மை மதத்தினரைக் கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களைப்பற்றியோ, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லை. பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர், இந்த பட்ஜெட்டில் அதையும் நிறுத்திவிட்டார்.
திருக்குறளைச் சொல்வதுகூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என அவர் நினைத்துவிட்டார்போலும். ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு மக்களுக்கு எதிரான பட்ஜெட். வேலை வாய்ப்புகளை உருவாக்காத பட்ஜெட். விலைவாசியைக் குறைக்க உதவாத பட்ஜெட். இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு எந்தவிதத்திலும் உதவாத பட்ஜெட். வாய் ஜாலம் மூலம் மக்களை ஏய்த்துவிடலாம் என நினைக்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.