ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பனிச்சறுக்கு போட்டியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 போலந்து வீரர்கள் பலியானார்கள். 21 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் அபர்வத் சிகரத்தில் நேற்று பனிச்சறுக்கு போட்டி நடந்தது. இதில் பங்கேற்க வெளிநாட்டைச் சேர்ந்த 21 பனிச்சறுக்கு வீரர்கள், 2 உள்ளூர் வழிகாட்டிகள் சென்றனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாரமுல்லா போலீசார் மற்றும் சுற்றுலாத்துறையின் கூட்டு மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 19 பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் போலந்து சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். ஹபத்குட் காங்டோரியில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. சுமார் 20 அடி உயரத்திற்கு பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இறந்தவர்கள் கிரிஸ்ல்டோப் (43), ஆடம் கிரெக் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 14,000 அடி உயரமுள்ள அபர்வத் மலைக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.