மும்பை: பலாத்கார வழக்கில் சிக்கிய ஆடிட்டர் ஒருவர், அவரது நண்பரின் ரிசார்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர் சிராக் வாரியா (45) என்பவர், நாசிக் மாவட்டம் இகத்புரியில் உள்ள தனது நண்பரின் ரிசார்ட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் சிராக் வாரியாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்ெகாலை செய்து கொண்ட ஆடிட்டர் சிராக் வாரியாவின் அறையில், தற்கொலை குறிப்பு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிராக்கின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளோம்.
தொடர் விசாரணையில், கடந்த ஜனவரி 10ம் தேதி பெண் ஒருவரை சிராக் வாரியா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக மற்றொரு காவல் நிலையத்தில் அவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வந்தார். இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளது. அவரது தற்கொலைக் குறிப்பு கடிதத்தில், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பெயர்களை குறிப்பிட்டு, தன்னை மன்னித்துவிடும்படி கூறியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.