நகரத்தார்கள் கண்டனூர், அரண்மனைப் பொங்கல், நெற்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒன்றிணைந்து சுமார் 400 ஆண்டுகள் பாரம்பர்யமாகக் காவடி எடுத்துப் பழநிக்குப் பாதயாத்திரை வருவது வழக்கம். இந்தாண்டு தைப்பூச விழாவையொட்டி தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக 291 காவடிகள் மற்றும் வைரவேலுடன் நகரத்தார்கள் பாதயாத்திரையை ஜனவரி 26-ம் தேதி தேவகோட்டை நகரப்பள்ளிக் கூடத்தில் காவடிகட்டித் தொடங்கினர்.
இந்தப் பாதயாத்திரைக் குழுவினர் குன்றக்குடி, சிங்கம்புணரி, நத்தம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வந்தனர். நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு நேற்று காலை பாரம்பர்யமிக்க நகரத்தார் காவடிகள் வைரவேலுடன் வந்து சேர்ந்தன.
பாரம்பர்யமிக்க வைரவேல், சர்க்கரைக் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு மீண்டும் நடந்தே வீடு திரும்புவர். கால மாற்றத்திற்கேற்ப தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் மாறாது தங்களது பயணங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.
பிப்ரவரி 4 அன்று பழநி சென்றடைந்து அதன் பின் பிப்ரவரி 6, மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்தியபின் நடந்தே வீடு திரும்புவார்கள். நேற்று பானக பூஜையை நத்தம் வாணியர் பஜனை மடத்தில் நடத்தினர். பக்தர்கள் முன்னிலையில் காவடிச் சிந்து பாடப்பட்டு, காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழநியை நோக்கி புறப்பட்டார்கள்.
இக்காவடிகளுக்கு நத்தம்பகுதியில் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களால் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சர்க்கரைக் காவடியுடன் புறப்பட்ட முருக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகப் பழநியை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் இடமெல்லாம் அன்னதானத்துடன் பக்தியை வளர்ப்பது இவர்களின் சிறப்பம்சமாகும். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி, ஆயக்குடி என ஒவ்வொரு பகுதிகளிலும் முருக பக்தர்களுடன் சேர்ந்து பூஜைகள் நடத்தி, அன்னதானம் செய்து தங்களின் பாதயாத்திரையைத் தொடர்கின்றனர்.