2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். பா.ஜ.க. தலைமையிலான அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான திட்டங்கள் இதில் இடம்பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதில் மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி வரி விதிப்பில் சலுகைகள், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பணப்புழக்கத்தை அதிகரித்து கிராம பொருளாதாரத்தில் செழுமை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வருமான வரி பிடித்தம் செய்யப்படும் உச்சரவரம்பை மாற்றியமைக்க வேண்டும் என்பதும் மாத சம்பளதாரர்களின் முக்கிய கோரிக்கைகளின் ஒன்றாக உள்ளது. அதாவது, ஆண்டு வருமானத்திற்கேற்ப தற்போது குறிப்பிட்ட சதவீதம் வருமான வரி பிடிக்கப்படுகிறது. இந்த அளவை குறைக்குமாறும் மாத சம்பளதாரர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த கோரிக்கை பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.
வீட்டுக் கடனுக்கு தற்போது ரூ.2 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கை அதிகரிக்குமாறு மாத சம்பளதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்வு, நிலங்களின் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த வரிவிலக்கு சலுகையை வழங்க வேண்டும் என்பதும் மாத சம்பளதாரர்களின் முக்கிய கோரிக்கையாகும். இது குறித்த அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட் உரையில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.