பிப்ரவரி 3ல் 7 படங்கள் ரிலீஸ்
2023ம் ஆண்டின் ஜனவரி மாதம் கடந்து போனதே தெரியாத அளவிற்கு மிக வேகமாகக் கடந்து போய்விட்டது. கடந்த மாதத்தில் மொத்தமாக 7 படங்கள் மட்டுமே வெளிவந்தது. அவற்றில் பொங்கலுக்கு வெளியான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் மட்டுமே தியேட்டர்காரர்களுக்கு வசூலைக் கொடுத்த படங்களாக அமைந்தது.
கடந்த மாதம் மொத்தமாக 7 படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், நாளை மறுநாள் பிப்ரவரி 3ம் தேதி மட்டுமே 7 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ரன் பேபி ரன், மைக்கேல், தி கிரேட் இந்தியன் கிச்சன், நான் கடவுள் இல்லை, தலைக்கூத்தல், பொம்மை நாயகி, குற்றப்பின்னணி” ஆகிய படங்கள் வெளிவருவதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவற்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'ரன் பேபி ரன், தி கிரேட் இந்தியன் கிச்சன்', சமுத்திரக்கனி நடிப்பில், 'தலைக்கூத்தல், நான் கடவுள் இல்லை' ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இந்த வாரம் மட்டுமல்ல வரும் வாரங்களிலும் குறைந்தது நான்கைந்து படங்களாவது வெளிவர உள்ளன. பிப்ரவரி 10ல் “டாடா, காசேதான் கடவுளடா, வசந்த முல்லை”, பிப்ரவரி 17ல் “வாத்தி, பகாசூரன்”, ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.