புதுச்சேரி: பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) மறந்ததாகக்கூறி புதுச்சேரியில் குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால் பிப்ரவரி் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் 2023 ஜனவரி 31ம் தேதிக்குள் அரசு தெரிவித்திருந்த இணையதள முகவரிக்கு தங்களுடைய 2022ம் ஆண்டின், அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விபரங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பலர் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து புதுச்சேரியில் தலைமைச்செயலரின் உத்தரவுப்படி சார்பு செயலருமான கண்ணன் அரசு துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் பல அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏற்கனவே அமைத்த கடவுச்சொல்லை மறந்துவிட்டதாகவும், அதை மீட்டமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். புதுச்சேரியில் கணக்கு தாக்கல் செய்யும் ஆன்லைன் போர்ட்டலைப் பார்க்கும்போது, பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் ஆன்லைனில் அசையும், அசையா சொத்து விவர கணக்குகளைப் பதிவேற்றியிருந்தாலும், இன்னும் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகள், குறிப்பாக கீழ்நிலை அலுவலகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்கள், கடவுச்சொல் சிக்கல் காரணமாக இன்னும் தங்கள் சொத்து கணக்குகளைப் பதிவேற்றவில்லை.
இதனால் 2022 ஆம் ஆண்டிற்கான கணக்கு விவரங்களை ஆன்லைனில் அனுப்பும் காலமானது வரும் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை தாக்கல் செய்யாத அனைத்து குரூப் “ஏ” மற்றும் “பி” அதிகாரிகள் இக்காலத்துக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அதை ஏற்க முடியாது. விஜிலென்ஸ் ஒப்புதல் மறுப்பு உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.