மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?.. ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!

டெல்லி: நாடாளுமன்றத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.

இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல் ஏந்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்பி.க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம்,  சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.