2023 -24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு `மத்திய பட்ஜெட் 2023 – 24′ தாக்கலானது. கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது.
அம்ரித் கால் என்ற வார்த்தையை பிரதமர் மோடி தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் ‘அம்ரித் கால்’ இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்பதற்கு ‘புதிய தொடக்கம்’ என்று பொருள்.
மத்திய பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான அம்சங்கள்…
*தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 11.74 கோடி வீடுகளுக்கு டாய்லெட், 9.6 கோடி உஜ்வாலா கேஸ் கனெக்ஷன், 47.5 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு, 44.5 கோடி பேருக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
*பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை ரூ.2.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டது.
*4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
*விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும். மீனவர் நலனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். தோட்டகலைத்துறைக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்படும்.
*மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
* பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
*இந்தியாவில் Sickle cell anemia ஒழிக்கும் மிஷன் திட்டமிடப்படும். மருந்து துறையில் ஆய்வுகளை அதிகரிக்க ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்.
*பழங்குடியின குழந்தைகளுக்கு ‘ஏகலைவா’ கல்வித்திட்டம் தொடங்கப்படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் ஆதிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த, ஜன் விஷ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டார்ட் அப்களுக்கான தேசிய தரவுகள் நிர்வாக கொள்கை கொண்டுவரப்படும்.
*டிஜிட்டல் தொடர்பான சேவைகளுக்கு பான் கார்ட் பொதுவான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
*அரசு ஊழியர்கள் தங்களின் திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.