தஞ்சை: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறியது: “மத்திய அரசின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கின்ற கோவர்தன் மற்றும் பிரணாம் திட்டம் மற்றும் வேளாண் விளைபொருட்களைச் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன கிடங்குகள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படுவதையும், நிகழாண்டிற்கு ரூ. 20 லட்சம் கோடி பயிர்க் கடன் வழங்குவதற்கு உயர்த்தி அறிவித்துள்ளதற்கு பாராட்டுகின்றோம்.
அதேவேளையில், பிரதமரின் விவசாயிகளின் வெகுமதி திட்டத்தின் நிதியை உயர்த்தி ரூ.12 ஆயிரமாக வழங்க வேண்டும் எனக் கடந்த 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும், மத்திய அரசு பரிசீலிக்காதது வருத்தமளிக்கிறது. ஜெய் கிஷான் ஜெய் ஜவான் என்று எல்லா அரசியல் தலைவர்களும் மேடைக்கு மேடை உதட்டளவில் பேசுகிறார்கள் தவிர உரிய அங்கீகாரத்தை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. இதேபோல் விவசாயிகளுடைய பயிர் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளில் வட்டி இல்லா வேளாண் கடன்களை வழங்க அறிவிப்பார்கள் என இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் புனிதமான நதிகளாகக் கருதப்படும் காவிரி, தாமிரபரணி நதிகளை தூய்மைப்படுத்திப் பாதுகாத்திட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேநேரம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற தேர்தலைக் கருத்திலே கொண்டு தேர்தல் லாபம் கருதி அங்கு சுமார் ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்திருப்பது மத்திய அரசின் நிதி அமைச்சர் அறிவிப்பா அல்லது கர்நாடகாவினுடைய நிதிய அமைச்சரின் அறிவிப்பா என்ற கேள்வி எழுகின்றது. எனவே, இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இவைகளுக்காக குரல் கொடுத்து நிதிநிலை கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி நடராஜன் கூறியது: “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும், வருமானத்தை பெருக்குவதற்கும், விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்கவும், புதிய மற்றும் பழைய நீர்ப் பாசனத் திட்டங்களை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லை, இந்தியாவிலுள்ள சிறு குறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வெறும் ரூ.63 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் குறைவாகும்.
மேலும், விவசாயிகளின் உற்பத்தி செலவினங்களை கணக்கீட்டு, அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கினால், ஒரே ஆண்டு இருமடங்காக வருமானம் உயரும் என அறிவித்து 9 ஆண்டுகளாகியும் இது போன்ற விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளது. இந்த நிதிநிலை அறிவிப்பு விவசாயிகளுக்கானதல்ல, நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் இல்லை, அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி கூறியது: ”மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள நிதிநிலையின் மூலம் பொதுமக்கள் நலன் என்பதை முற்றிலும் புறக்கணித்துவிட்டு வருவாய் இலக்கு ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது வெளிப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான நலவாழ்வு திட்டங்கள், விவசாயிகள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் ஏதும் இல்லாதது இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வழியாக விருத்தாசலத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படவேண்டும் எனக் கும்பகோணம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், எந்த ஓர் ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டத்துக்கும் அளவீடு மேற்கொள்ளும் பணி தொடங்கப்படும் என அறிவித்தது, அறிவிப்பு நிலையிலேயே உள்ளது” எனத் தெரிவித்தார்.
வாசிக்க > வருமான வரிச் சலுகை முதல் நிதி ஒதுக்கீடுகள் வரை: மத்திய பட்ஜெட் 2023-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்