திருச்சி: “அடுத்த வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலமாக இருக்கும் என்று நம்முடைய பிரதமர் கூறியிருப்பதால், அந்த 25 வருடத்துக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை புதன்கிழமை (பிப்.1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த பட்ஜெட் வரும் என்பதற்கு, நேற்று கொடுக்கப்பட்ட பொருளாதார புள்ளிவிவர அறிக்கையின் ஆவணமே அளவீடாக இருக்கிறது.
இந்த பட்ஜெட் உரையை ஆரம்பிக்கும்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலமாக இருக்கும் என்று நம்முடைய பிரதமர் கூறியிருப்பதாக தெரிவித்தார்கள். அந்த 25 வருடத்துக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.
அதில் குறிப்பாக உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யவுள்ளது. பட்ஜெட் முடிந்தபின்னர்தான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வரும் என்பது தெரியும்.
எல்லா வருடங்களையும் போல, இந்த ஆண்டும் மத்திய அரசு தமிழகத்திற்கு குறிப்பாக உள்கட்டமைப்புக்கு மிக அதிகமாக நிதி ஒதுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, நம்முடைய நம்பிக்கை. நேற்றைய பொருளாதார புள்ளிவிவர அறிக்கை நம்முடைய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் சர்வதேச நிதியம் கூறியிருப்பதை வைத்து கணித்துள்ளனர்” என்று அவர் கூறினார்.