புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய புள்ளி விவரங்கள்:
- இந்திய பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு வந்திருக்கிறது.
- தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
- புதிய வருமான வரி முறையில், வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சமாக அதிகரிப்பு
- அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 2022-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அறிக்கைப்படி இந்தியாவின் சுற்றுச்சூழல் தர மதிப்பீடு 100க்கு 66 ஆக உயர்ந்துள்ளது.
- 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்வு
- பெண்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ. 2லட்சம் வரை வைக்கும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்.
- கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்படும்
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்படும். அதாவது, இத்திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
- விவசாய கடன் இலக்குத் தொகை ரூ. 20 லட்சம் கோடி
- பழங்குடி மக்களுக்கான வீடு, குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி
- ஏகலைவன் உரைவிட பள்ளிகளுக்காக 38,800 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்மூலம் 3.5 லட்சம் பழங்குடி மாணவர்கள் பலனடைவார்கள்.
- நாடு முழுவதும் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாவதில் உலகில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.