புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையின்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். புதிய திட்டமானது மகிளா சம்மான் பச்சாட் பத்ரா என்று அழைக்கப்படும்.
இந்தப் புதிய திட்டமானது பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை டொபாசிட் செய்ய முடியும். இந்த புதியத் திட்டம் 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த புதிய திட்டத்தில் நிலையான வட்டியாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்தில் பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
மூத்த குடிமக்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தினையும் நிதியமைச்சர் அறிவித்தார். இந்தப் புதிய திட்டத்தின்படி, அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் அனைத்தும், மத்திய பட்ஜெட்டின் நிதித்துறை முன்னுரிமைகளின் கீழ் அறிவிக்கப்பட்டன. அமிர்த காலத்தின் பகுதியாக 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 7 பிரிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. மத்திய அரசால் பட்டியலிடப்பட்டடுள்ள இந்த ஏழு முன்னுரிமைகளும் “சப்தரிஷிகளை” பிரதிநிதித்துவப்படுத்தும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஏழு முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகள்: நிதித்துறை, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி இலக்கை அடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறன்களை வளர்த்தல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி.