யுனைடெட் வே சென்னை மற்றும் எச்.எஸ்.பி.சி நிறுவனங்கள், ஸ்வஸ்தி அமைப்புடன் இணைந்து சென்னையில் முதல் ட்ரான்ஸ் கிச்சனைத் தொடங்கியுள்ளனர். கொளத்தூரில் அமைந்துள்ள இந்த உணவகம் ஜனவரி 18-ம் தேதி மக்களின் பரவலான ஆதரவோடு சிறப்பாகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சென்னை ட்ரான்ஸ் கிச்சன் உணவத்தில் ஐந்து திருநம்பிகள், ஐந்து திருநங்கைகள் என திருநர் சமூகத்தைச் சேர்ந்த பத்து பேர் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் மூன்று மாதங்களாக சமையல் கலை, உணவு பரிமாறுதல், உணவு அலங்கரிப்பு என எல்லா வேலைகளிலும் சிறந்த நிபுணர்களிடமிருந்து பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.
‘Transgender Rights Association’ அமைப்பின் இயக்குநர் ஜீவா, “திருநர் சமூகத்தினர் இப்போது எல்லா துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அதே போல வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு, ஒரு புது வாழ்கையையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக்கொடுத்து, அவர்களும் முதலாளி ஆகலாம் என்ற தன்னம்பிக்கையை கொடுப்பதே எங்களின் நோக்கம்.
15 லட்ச ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ட்ரான்ஸ் கிச்சனில், திருநர் சமூகத்தைச் சேர்ந்த பத்து பேர் வேலை செய்கின்றனர். ஐந்து திருநங்கைகளுடன், ஐந்து திருநம்பிகளும் சேர்ந்து இங்கே வேலை செய்கின்றனர் என்பது இதன் சிறப்பம்சம். பொதுவாக திருநர் சமூகத்தினருக்கான நலன்கள் பற்றிப் பேசும் போது, பல சமயம் திருநம்பிகளை அங்கீகரிக்க மறந்துவிடுகிறோம். திருநம்பிகளும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். அதனால், இந்த உணவகத்தில் திருநங்கைகளுடன் திருநம்பிகளுக்கும் சமமான வாய்ப்புகள் அளித்துள்ளோம்” என்றார்.
அங்கு வேலை செய்யும் திருநங்கை சஞ்சனா, “நான் எட்டாவது வரை படிச்சிருக்கேன். மூணு மாசத்துக்கு முன்னாடி வரை, சென்னையில ஒவ்வொரு கடைக்கும் போய் காசு கேப்பேன். அப்போ எல்லாரும் பார்வையிலேயே என்ன நிறைய காயப்படுத்தி இருக்காங்க. எங்களுக்கும் நல்ல வேலை செஞ்சு வாழணும்னுதான் ஆசை. ஆனா யாருமே எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கல. இருந்தாலும் வாழ்ந்து ஆகணுமே, அதனால கிடைச்ச வேலை எல்லாம் செஞ்சேன்.
ஜீவா அம்மாகிட்ட இத பத்தி சொன்னேன். அவங்க இந்த ட்ரான்ஸ் கிச்சன் பத்தி சொன்னாங்க. ஒழுங்கா பயிற்சி செய்து, பாஸ் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு சொன்னாங்க. நான் எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் பரவால்லன்னு வந்தேன். 60 பேர்ல பத்து பேர் செலக்ட் பண்ணி இப்போ இந்த உணவகத்தை நாங்களே நடத்தப் போறோம். முதல் நாளே நிறைய வாடிக்கையாளர்கள் வந்தது ரொம்பவே சந்தோஷமா இருக்கு” என்றார்.
மேனகா மோகன், ”ஆரம்பத்துல பயிற்சிக்கு அப்பறம் நீங்களே உணவகத்தை நடத்தணும்னு சொன்ன போது, நான் நம்பவே இல்ல. ஆனா உண்மையிலேயே எங்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் பயிற்சி கொடுத்தாங்க. நான் இதுக்கு முன்னாடி பாலியல் தொழிலில்தான் ஈடுபட்டிருந்தேன். ஆனா நான் தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். எனக்கு டேலி தெரியும், கோரல் ட்ரா, டைப்பிங், கேக் பேக்கிங், டெய்லரிங், ட்ரைவிங் எல்லாம் தெரியும். ஆனா யாரும் வாய்ப்பு கொடுக்கலை. இப்போ நிலையான ஒரு வேலை, சம்பளம்னு கிடைச்சிருக்கு. இந்த வாய்ப்பை நேர்மையா பயன்படுத்தி வாழ்வேன்” என்றார்.
திருநர் சமூக ஆர்வலர் ப்ரியா பாபு, “ஸ்வஸ்தி அமைப்பு மூலம், நாங்கள் ஏற்கெனவே கோவையிலும் மதுரையிலும் திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ட்ரான்ஸ் கிச்சனை உருவாக்கியுள்ளோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வரவேற்பும் வெற்றியும்தான், சென்னையில் இந்த மூன்றாவது உணவகத்தைத் திறக்க ஊக்குவித்தது. பிப்ரவரி இறுதிக்குள், சென்னையில் இன்னொரு ட்ரான்ஸ் கிச்சன் உணவகத்தை தொடங்கவுள்ளோம். அதற்கான அறிவுப்புகள் விரைவிலேயே வெளிவரும்” என்றார்.
தொடர்ந்து, “நாங்கள் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சுமார் 8000 திருநங்கைகளுடன் வேலை செய்து வருகிறோம். நான் சந்தித்த பல திருநர்கள், உணவு துறையில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற நிலையான வேலையாக இல்லாமல், சீசனல் வேலையாகத்தான் இருக்கும். அதனால் சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று போராடும் திருநர் சமூகத்திற்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ’ட்ரான்ஸ் கிச்சன்’ உருவானது.
முதலில் கோவையில் பல திருநங்கைகள் சமையல் துறையில் ஆர்வத்துடன் வேலை செய்து வந்ததால், எங்கள் முதல் உணவகத்தை அங்கேயே தொடங்கினோம். 2021ல், மதுரையில் இரண்டாவது ட்ரான்ஸ் கிச்சனைத் தொடங்கினோம். இந்த இரண்டு உணவகங்களின் வெற்றியை அடுத்து, திருநர் சமூகத்தில் பல நல்ல மாற்றங்கள் உருவாகின. பலரும் சுயமாக உழைத்து வாழ வேண்டும் என்று தங்களுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டனர். அதனால், மூன்றாவதாக சென்னை கொளத்தூரில் இந்த ட்ரான்ஸ் கிச்சனை ஆரம்பித்துள்ளோம்.
உணவு, நம் சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. எதிரிகள் கூட ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது நண்பர்களாகி விடுவார்கள். அதனால், அந்த உணவை எங்களுடைய ஆயுதமாக மாற்றி, திருநர்களுக்கும் பொது மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.