முதுமலை: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் நேற்று இரவு பழங்குடி பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் முதுமலை மசினகுடி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாரி (63). நேற்று வழக்கம் போல வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர், வனப்பகுதிகளில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாரி மாயமானதால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அடர்ந்த வனத்துக்கு சென்றார். அப்போது, அங்கு பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உடனடியாக ஊருக்குள் ஓடி வந்து தகவல் தெரிவித்தார். மேலும், வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் வனத் துறையினரும், பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அப்போது அது மாயமான மாரி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அறிய வனத் துறையினர் அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது உடலில் புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். வனத்திற்குள் சென்ற மாரியை புதர் மறைவில் மறைந்திருந்த புலி தாக்கி கொன்றுள்ளது.
பின்னர் அவரது உடலை இழுத்து சென்று, மாரியின் கால் பாகங்களை தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் முதுமலை மசினகுடி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களிடம் வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தெப்பக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேட்டை தடுப்பு காவலர் ஒருவரை புலி தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது, புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.