எரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது .
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராஜாமலையில் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரையாட்டின் குட்டிகள் தென்பட்டன. பூங்காவின் உள்ளே நாய்கொல்லி பள்ளத்தாக்கில் புதிய வரையாட்டின் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மூணாறு வன உயிரின காப்பாளர், 1ஆம் தேதி முதல், பூங்காவை மூட, தலைமை வன உயிரின காப்பாளரிடம் கடிதம் கொடுத்தார். வரையாடுகளின் பாதுகாப்பான இனப்பெருக்க காலத்தை உறுதிசெய்யவும், பார்வையாளர்களின் வருகையால் குட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் பூங்கா மூடப்பட்டுவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த ஆண்டுக்கான வாரயாடுகளின் கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். கடந்த ஆண்டு இந்த பகுதியில் நடந்த வரையாடுகளின் கணக்கெடுப்பில் மொத்தம் 785 வரையாடுகள் கண்டறியப்பட்டன. இதில் புதியதாக 125 புதியதாக குட்டிகள் பிறந்ததாக கணக்குகாட்டப்பட்டது. வழக்கமாக, ஜனவரி இரண்டாவது வாரத்தில் வரையாடுகளின் பிரசவக்காலம் தொடங்கும், ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பூங்காவிற்குள் புதிய குட்டிகள் காணப்பட்டது. இரவிகுளம் தேசிய பூங்கா தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது இங்கு தினமும் சராசரியாக 3,000 சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதனையடுத்து, மூணார் இரவிகுளம் தேசிய பூங்கா பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு இந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு வர அனுமதியில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.மீண்டும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இந்த பூங்கா சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.