அகமதாபாத்: குஜராத் மோர்பி கேபிள் பாலத்தை பராமரிக்கும் ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநர் ஜெய்சுக் படேல் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த கேபிள் பாலம் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் ஒரேவா குழுமத்தால் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபர் 30-ம் தேதி இப்பாலத்தில் சுமார் 300 பேர் நின்றிருந்த நிலையில் அது அறுந்து விழுந்தது. இதில் 135 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் ஒரேவா குழுமத்தின் 2 மேலாளர்கள், 2 துணை ஒப்பந்ததாரர்கள், 2 டிக்கெட் விநியோக ஊழியர்கள், 3 பாதுகாவலர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநர் ஜெய்சுக் படேல், தலைமறைவாகி ஜாமீன் பெற முயன்றுவந்தார்.
வழக்கில் முக்கிய குற்றவாளி யாக சேர்க்கப்பட்டுள்ள அவரை கைது செய்ய மோர்பி நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஜெய்சுக் படேல் நேற்று மோர்பி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.