நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் உரையின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:
“ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல், இளைஞர் சக்தி, நிதித்துறை உட்பட மொத்தம் 7 முக்கிய அம்சங்களில் இந்த பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் வரும் முன்னுரிமை குடும்பங்களுக்கு, அடுத்த ஒரு வருடத்திற்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இதற்கான ரூ. 2 லட்சம் கோடி செலவினம் முழுவதையும் அரசே ஏற்கும்.
அம்ரித் காலுக்கான எங்களின் பார்வையானது, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவற்றை உள்ளடக்கியது.
கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நோக்கில், விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் MSMSEகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ரூ. 6,000 கோடி முதலீட்டில் புதிய துணைத் திட்டம் தொடங்கப்படும்.
2014 முதல் தற்போது வரை உள்ள மருத்துவக்கல்லூரிகளுடன் சேர்த்து 157 புதிய செவிலியர்கள் கல்லூரிகள் கட்டப்படும்.
கூட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நோக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, ஐ.சி.எம்.ஆர் ஆய்வகங்களில் பொது மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள், ஆய்வுத்துறையை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ய வசதிகள் செய்து தரப்படுகிறது. மருந்து ஆய்வு நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய அரசின் தொழில்துறையை ஊக்குவிக்கும்.
குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டு, அங்கு புவியியல், மொழிகள், அவற்றின் வகைகள் மற்றும் நிலைகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களில் தரமான புத்தகங்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் அமைக்கப்படும்.
முதலீடு மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவை அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக தொடர்கிறது.
மூலதன முதலீட்டு செலவு, 33 சதவீதமாக அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம்.
ரயில்வேத்துறைக்கான பட்ஜெட் மொத்தம் ரூ.2.40 லட்சம் கோடிக்கு தாக்கலாகிறது. இது, 2013-14ம் ஆண்டு தாக்கலானதை காட்டிலும் 9 மடங்கு அதிகம்
வணிக நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் பொதுவான அடையாளங்காட்டியாக PAN கார்டு பயன்படுத்தப்படும்
அடுத்த நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, இந்த நிதியாண்டுக்கான 6.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, GDP-யில் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை 2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்குக் கீழே கொண்டு வரும் நோக்கம் உள்ளது.
தொலைக்காட்சி, கேமரா லென்ஸ் போன்றவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. பேட்டரிகள் மீதான Lithium – Ion Cells சலுகைகள் அடுத்த ஓராண்டுக்கு தொடரும்
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தட்ட புதிய வருமான வரி விலக்கின் கீழ் வருவோருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பு. இதன்மூலம் புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் வருமான வரி அடுக்குகள் 7-லிருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 0 – 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது; ரூ. 3 – 6 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 5% வரியும்; ரூ. 6 – 9 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 10% வரியும்; ரூ. 9 – 12 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 15 % வரியும்; ரூ. 12 – 15 லட்சம் வருமானம் உள்ளோர் 20 % வரியும்; ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 30%-ஐ வரியும் செலுத்த வேண்டும்”
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM