புதுடெல்லி: புதிய வரி விதிப்பு முறையில் ரூ.7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால், மக்களுக்கு சேமிப்பு பழக்கம் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் பலர், சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள். எதிர்கால தேவைக்காக மட்டுமின்றி, வரிச்சலுகை பெறுவதற்காகவும் இந்த சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்வார்கள்.
ஆனால், புதிய வரி முறையின்படி ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சம்பளதாரர்கள் வரி செலுத்த தேவையில்லை என்பதால், இத்தகைய சேமிப்பு திட்டங்கள் இனி கவர்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை என நிதி மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சேமிப்பு திட்டங்களில் வட்டி வருவாய் முன்பிருந்த அளவுக்கு இல்லை. இருப்பினும், வரிச்சலுகை பெற வேண்டுமே என்பதற்காக அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு திட்டங்களில் பலர் முதலீடு செய்து வருகின்றனர். வங்கிகளும் வரி சலுகைக்காகவே பிரத்யேக திட்டங்களை அமல்படுத்தியுள்ளன. புதிய வரி முறையின்படி இவ்வாறு முதலீடு செய்தால்தான் வரிச்சலுகை பெற வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்த திட்டங்கள் ஈர்க்க வாய்ப்பு குறைவுதான்.
இதனால், நாளடைவில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் நடுத்தர மக்களுக்கு இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே கடந்த 2008-09ல் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியாவை காப்பாற்றியது இந்த சேமிப்பு பழக்கம்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, சேமிப்பு பழக்கம் இல்லாதது பொருளாதார நெருக்கடியின்போது ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை உருவாக்கும் அபாயமும் உள்ளது. இதுமட்டுமின்றி, மேலை நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சைகள், ஓய்வூதியம் உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் இத்தகைய திட்டம் எதுவும் இல்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோல்தான், காப்பீட்டு, ஓய்வூதிய திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறைந்து விடும் அபாயம் உள்ளது. பழைய வரி முறையில் 80சிசியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரிக்கழிவு மற்றும் தேசிய பென்ஷன் திட்டத்தில் ரூ.50,000 வரிக்கழிவு பெறலாம். இதற்கெல்லாம் இனி அவசியமில்லாமல் போய்விட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.