வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற உள்ளது.
சட்டத்தால் வெளிநாட்டவர்களுக்கு என்ன நன்மை
அந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். ஒருபடி மேலே போய், ஜேர்மன் மொழிப்புலமை, தன்னார்வலராக பணியாற்றுதல் மற்றும் கல்வியில் சிறந்துவிளங்குவோர் என ஜேர்மனியுடன் நல்ல முறையில் ஒருங்கிணைந்து வாழ்வோர் மூன்று ஆண்டுகளிலேயே கூட குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் திறன்மிகுப்பணியாளர்கள், தங்களுக்கு ஜேர்மன் கல்வித்தகுதி, பணி அனுபவம் அல்லது ஜேர்மனியில் பணி இருப்பதாக அவர்கள் ஜேர்மனியிலிருந்து பெற்ற பணி அழைப்பு ஆகியவை இல்லையென்றால்கூட, ஜேர்மனிக்கு வருவது எளிதாக்கப்படும்.
தடையாக நிற்கும் நடைமுறை பிரச்சினைகள்
ஆனால், இந்த மாற்றங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒருமுறை ஜேர்மன் குடியுரிமை கொடுத்தால், அது காலாகாலத்துக்கும் நிலைத்துவிடும். ஆகவே, குடியுரிமை பெறுவதற்கு ஒருவர் எட்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பது நியாயமானதுதான் என்கிறார் CDU கட்சியின் உள்விவகாரங்கள் செய்தித்தொடர்பாளரான Alexander Throm.
CSU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Andrea Lindholz, இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பது நாட்டுக்கு உண்மையாக இருப்பதில் முரண்பாடுகளைக் கொண்டுவரும் என்கிறார். அது, ஜேர்மனியில் சமுதாய ஒற்றுமையை வலுவிழக்கச் செய்துவிடும் என்கிறார் அவர்.
இப்படி எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவிக்க, நடைமுறையில் வேறொரு பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கிறார்கள் அரசு அலுவலர்கள்.
ஏற்கனவே குடியுரிமைக்காக பெர்லினில் மட்டும் விண்ணப்பித்திருப்பவர்களின் விண்ணப்பங்களில் 26,000 விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலனையில் உள்ளனவாம். அவற்றில் 10,000 விண்ணப்பங்கள் 2021இல் அளிக்கப்பட்டவை.
விண்ணப்பங்களைப் பரிசீலிக்க ஏற்கனவே அரசு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருமானால், குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிடும். குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலை உருவாகிவிடும் என்கிறார்கள் அரசு அலுவலர்கள்.