புதுடில்லி: நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க, வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* அரசு ஊழியர்கள் தங்களது திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக்கொள்ள கர்மயோகி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* இளைஞர் திறன் மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 30 மையங்கள் அமைக்கப்படும்.
* பசுமை வேளாண் திட்டத்திற்காக பி.எம் பிரணாம் எனப்படும் புதிய திட்டம் கொண்டுவரப்படும்.
* மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட ஊழியர்கள் பிரணாம் திட்டத்திற்காக பயன்படுத்தப்படுவர்.
* மாங்குரோவ் காடுகளை பாதுகாக்கவும், அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய மாநில பங்களிப்போடு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
* அடுத்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் பயோ இன்புட் ரிசோர்ஸ் மையங்கள் (Bio Input Resource Centre) அமைக்கப்படும்.
* லடாக்கில் சூரியஒளி ஆற்றல் உள்ளிட்ட பசுமை எரிசக்தி ஆலை ரூ.27,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் 47 லட்சம் இளையோர் மேம்பாடு அடையும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
* சி.என்.ஜி உள்ளிட்ட பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி
* சிறு, குறு நிறுவனங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* மாநிலங்களுக்கான 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.
* பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்திற்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
* நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க, வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.
* வங்கிகள் சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கி சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
* சுற்றுலாத்துறையை மேம்படுத்த ‛தேக்னா அப்னா தேஷ்’ என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது.
* 7.5 சதவீதம் வட்டியில் பெண்களுக்கு பிரத்யேக புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் 2 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.
* அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாத வருமானம் பெறும் வகையில் முதியோர் வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு
* ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்வு.
* ஜாயிண்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதி.
நிதி பற்றாக்குறை:
* நடப்பாண்டிற்கான நிதி பற்றாக்குறை 6.4 சதவீதமாக திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது.
* வரும் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 5.9 சதவீதமாக குறையும்
* வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரி குறைப்பு
* கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.
* செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு
* இறால் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்படும்.
* தொலைக்காட்சி பேனல்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதம் குறைப்பு
* பயோ எரிவாயுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
வரி உயர்வு:
* சமையலறை மின்சார சிம்னிக்கான இறக்குமதி வரி உயர்வு
* சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.
* புகையிலை பொருட்கள் மீதான வரி 16 சதவீதம் வரை உயர்த்தப்படும்.
* தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
* ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்