மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 12.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. மேலும் டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வென்று அசத்தியது.