அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?

உலக பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த இந்தியாவின் கோடீஸ்வரரான கௌதம் அதானி, இப்போது மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார். அவரின் பங்குகள் சந்தை மதிப்பைவிட மிகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதற்கு பின்னணியில் அவருடைய பினாமிகள் பெயரில் வெளிநாடுகளில் செயல்படும் நிறுவனங்களே காரணம் என சந்தை மதிப்புகளை பகுபாய்வு செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பெர்க் குற்றம்சாட்டியது. மேலும், ஆதாரங்களுடன் இந்த குற்றச்சாட்டை முன் வைத்ததுடன், அதானி நிறுவனம் தங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தது. அதானி நிறுவனம் சார்பில் வழக்கு தொடர்வதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்த அறிவிப்புக்கு பின்னர் சர்வதேச சந்தையில் அதானி நிறுவனங்கள் மீதான பங்கு முதலீடுகள் சரியத் தொடங்கியது. இந்திய பங்குச் சந்தையிலும் பெருமளவு அது எதிரொலித்தது. அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கிடுகிடுவென சரியத் தொடங்கியதை அடுத்து அவரின் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் உருவானது. அதற்கு விளக்கம் கொடுத்த அதானி நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, இது இந்தியாவின் மீது தொடக்கப்பட்டிருக்கும் நேரடி தாக்குதல் என்றெல்லாம் கூறியது.

ஆனால், அதானியின் விளக்கத்துக்குப் பிறகும் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. தொடர்ச்சியாக அவரது நிறுவனங்கள் சார்பில் கொடுக்கப்படும் நிதி ஆணவங்களை ஏற்க சர்வதேச நிதி நிறுவனங்கள் வெளிப்படையாக மறுப்பு தெரிவித்து வருகின்றன. இது மற்றொரு பெரும் பின்னடைவாக அதானிக்கு அமைந்தது. அதானியின் பங்கு சந்தை மதிப்புகள் வீழ்ச்சிக்கு ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை மட்டுமே காரணமல்ல என தெரிவித்துள்ள முன்னணி நிதி நிபுணர்கள், அந்த அறிக்கை தூண்டுகோல் மட்டுமே என விளக்கம் கொடுத்துள்ளனர். சந்தையில் இருப்பவர்கள் இதனை ஏற்கனவே யூகித்ததாகவும், ஹிண்டன்பெர்க் அறிக்கைக்குப் பின்னர் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை வெளிவந்தபிறகு அதானியின் பங்குச் சந்தை மதிப்பு மட்டும் இதுவரை சுமார் 108 பில்லியன் அமெரிக்க டாலர் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8.8 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் மட்டும் 3.9 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார். இப்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்தில் இருக்கிறார் அதானி. இது எத்தியோபியா மற்றும் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபிக்கு சமமான தொகை என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.