அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.

அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6ம் தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இன்று நாடாளுமன்றம் கூடியதும், எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட ஆய்வறிக்கையில்  அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது என தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை 413 பக்க அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், ‘இது அதானி நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்’ என தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க் நிறுவனம், ‘இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடை படுகிறது; மோசடியை தேசியவாதத்தால் மறைக்க முடியாது’ என்று கூறியது. இவ்விவகாரத்தில், அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி மற்றும் ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

மேலும், அதானி குழுமம் மீதான புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6ம் தேதி, எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டியும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில், ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதத்திற்கு மத்தியில், எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடிய நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.