Salem Temple Caste Issue: சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோயில் நடைபெற்ற பண்டிகையின் போது அந்த பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர். மேலும், அந்த இளைஞரை பொதுமக்கள் முன்னிலையில் அவதூறாக ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த நிலையில், அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்தில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியோடு இன்று அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பூட்டிப்பட்டிருந்த கோயில், இன்று திறக்கப்பட்டு கோவிலுக்குள் அந்த மக்களை அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனைவருக்கும் தீபாரதனை காட்டப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மேலும் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கோவில் திறக்கப்பட்டுள்ளது, எந்த சமுதாய மக்களும் கோவிலில் வழிபடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சேலத்தில் நிலவி வந்த பதட்டமான சூழ்நிலையும், அரசியல் கட்சிகளின் போராட்ட அறிவிப்பும் முடிவுக்கு வருவதாக தெரிகிறது.