இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி 

சென்னை: எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை கடந்த 1 ஆம் தேதி இரவு டெல்லிக்கு அவசரமாக பயணப்பட்டார். டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று (ஜன.2) காலை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசியல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக நட்டாவிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. மேலும், சில முக்கியத் தலைவர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜன.3) காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இது குறித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, “தமிழக மக்களுக்கு எதிரான கட்சி திமுக. திமுக அரசு மீது மக்களிடம் நம்பிக்கை இல்லை. மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி திமுக தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. இந்த ஆட்சி மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியுள்ளது.

இந்த நேரத்தில் நிலையான, உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்திற்கு தேவை. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று வலியுறுத்தினோம் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறினோம். ஒன்றிணைந்து இருந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்று கூறினோம். பாஜக நிலைப்பாடு குறித்து தெரிவிக்க பிப்.7 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.