ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்திருந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பி.எஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க பொதுக்குழு முடிவுசெய்யலாம். ஓ.பி.எஸ், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம். முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு வெளியான பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம், “குறைந்த கால அவகாசம் இருப்பதால் கூட்டத்தைக் கூட்டமுடியாது. எனவே, கடிதம் மூலமாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுடைய கருத்துகள் என்பதைவிட, பொதுக்குழுவால் பரிந்துரைக்கப்படுகிற பெயரை `ஏற்றுக் கொள்கிறோம்,’ `இல்லை’ என்று வாக்குகளைப் பெற்று, அந்த வாக்குகளில் பெருவாரியான வாக்குகளை யார் பெற்றிருக்கிறார்களோ அந்த முடிவை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கவேண்டும். அதைத் தேர்தல் ஆணையம் ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இன்றைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதில் சொல்லப்பட்டது என்னவென்றால், இந்த தேர்தலுக்கு மட்டும்தான் இந்த உத்தரவு. ஏற்கெனவே நிலுவையில் இருக்கின்ற வழக்குகளோ, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளோ, யாருடைய உரிமையை எடுப்பதாகவோ, புதிதாக யாருக்கும் உரிமை கொடுப்பதாகவோ இல்லை. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு, இரட்டை இலைச் சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பதற்கு, தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு தெளிவான உத்தரவு.
பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டுவார். அ.தி.மு.க-வில் பெரும்பாலான உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, பொதுக்குழுவில் யார் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறுகிறாரோ, அவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவார்” என்று கூறினார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், “இந்த வழக்கை பொறுத்தவரையில், இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இடைக்கால பொதுச்செயலாளராக இரட்டை இலைச் சின்னத்தில் கையொப்பமிட எடப்பாடி பழனிசாமிக்கும் அதிகாரம் அளிக்கவில்லை என்பதுதான் இந்த உத்தரவு. அன்று நீக்கப்பட்ட நான்கு பேர்கூட பொதுக்குழுவில் அவர்களுடைய முடிவையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டது, தர்மம் ஓ.பி.எஸ் பக்கம்தான் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
அ.தி.மு.க என்று இன்றைய சூழலில் எடுத்துக்கொண்டால், ஒன்று ஓ.பி.எஸ், மற்றொன்று இ.பி.எஸ். இவர்களைத் தவிர்த்து, தரப்பு என்பது யாருமில்லை. ஓ.பி.எஸ், இரட்டை இலையில் கையொப்பமிடுவேன் என்று சொன்னதன் அடிப்படையில் இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளர் என்று கடந்த சில மாதங்களாகக் கூறிக்கொண்டு, தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றவர்களின் கூற்றுகளைக்கூட நீதிமன்றம் நிராகரித்துவிட்டது” என்று தெரிவித்தார்.