ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவை இன்று (பிப்.3) தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று (ஜன. 3) வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் எம்.எல்.ஏ.வி.சி.சந்திரகுமார் ஆகியோருடன், தேர்தல் நடத்தும் அலுவலரான க.சிவகுமாரிடம், ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வெற்றி உறுதி…இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,” இந்த தேர்தலில் தனிப்பட்ட மனிதர் வெற்றி அடைவதை விட மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளர் வெற்றி பெற விரும்புகிறேன். என் மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை தொடர விரும்புகிறேன். மாவட்ட அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து எனது மகன் திருமகன் ஈவெரா பட்டியல் தயாரித்துள்ளார். அதில் பல பணிகளை செய்துள்ளார். மீதம் உள்ளவற்றை மேற்கொள்ள நான் பாடுபடுவேன். குறிப்பாக ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைப் போக்கவும், ஜவுளி மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சாயக்கழிவு நீரை அப்புறப்படுத்துவது குறித்து அமைச்சர் மற்றும் முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன்.
திமுகவினர் மிகச்சிறப்பாக தேர்தல் பணி செய்து வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே எனக்காக ஆதரவு தேடத் தொடங்கி விட்டனர். இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தள்ளிப்போனது குறித்து நான் கவலைப்படவில்லை. ஈரோட்டிற்கு நல்ல காரியம் செய்யவே நான் போட்டியிடுகிறேன். யார் எதிர்க்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து நடவடிக்கை எடுக்கும். பாஜக தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய மனிதர். என்னை போன்ற சிறிய மனிதர்கள் அவருக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. அவர் சொல்வதை நான் பொருட்படுத்துவது இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.