ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க-வின் எடப்பாடி அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த தருணத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம், “இந்த அறிவிப்பின் மூலம் ஓ.பி.எஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்த தேர்தலில் யாருக்கு செல்வாக்கு என்பது தெரிந்து விடும். உண்மையான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். ஓ.பி.எஸ் படுதோல்வி அடைவார்.” என்றார்.
`ஓ.பி.எஸ் அதிமுக சின்னத்தை முடக்க மாட்டேன். படிவத்தில் கையெழுத்திட தயாராக இருக்கிறேன்’ என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு, “ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் எனக்கும் அதிமுக-வுக்கும் சம்மந்தம் இல்லை. எடப்பாடிக்கே சின்னத்தை கொடுத்து விடுங்கள் என்று சொல்லலாமே, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் வேலையைத்தான் அவர் செய்கிறார்.” என்றார்.
இபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏன்? என்ற கேள்விக்கு, “இது தாமதமே இல்லை. ஒரு பக்கம் கூட்டணியான பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படும் இல்லையா?” என பதிலளித்தார்.
மேலும், “சின்னம் குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை. நீதிமன்றத்தில் சின்னம் கிடைக்க போராடுவோம். ஒரு வேளை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு முழு காரணம் ஓ.பி.எஸ் தான். அப்படி ஒரு வேளை சின்னம் கிடைக்காவிட்டால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்றும் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அவர்களிடம் பேசிய போது, “எங்கள் கட்சித் தலைவர் அண்ணாமலை விரைவில் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறியுள்ள நிலையில், தாமதத்திற்கான காரணம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.
தற்போது பாஜக, இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.