நாட்டின் கடற்பரப்பிற்குள் இடம்பெற்ற கப்பல் விபத்துக்களை கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சு, கடற்படை மற்றும் தனியார் சுற்றுலா நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு இவ்வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டின் கடல் எல்லைக்குள் 47 கப்பல்கள் மூழ்கியுள்ளன. அக்கப்பல்களை பார்வையிடுவதற்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் இருப்பதுடன், கடலுக்கு அடியில் சென்று புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யும் பல சர்வதேச குழுக்களும் உள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அங்கு மதிப்புள்ள கப்பல்கள் இருந்தால், அவற்றை மீட்டு, அதன் பாகங்களை விற்பனை செய்து, அரசாங்க கணக்கில் பணம் சேர்ப்பது குறித்து கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மூழ்கிய கப்பல்களை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.